மேற்கண்ட தலைப்பில் மக்களாட்சி இயக்கம் மே 9 அன்று ஒரு இணையவழிக் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் வேட்பாளர்கள் பலரும் பங்கேற்று தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மக்களாட்சி இயக்கத்தின் தலைவர் திரு இராகவன் கூட்டத்தைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் இடையே மக்களுடைய பிரச்சனைகளை மையமாக வைத்து தங்களுடைய சொந்த பணத்தைச் செலவழித்துத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் வேட்பாளர்களைப் பாராட்டினார். இன்று மிகப் பெரிய ஏகபோகங்களுடைய கட்சிகள் தான் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சாதாரண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வேட்பாளர்கள் மிகச் சிலரையே தேர்தலில் காண முடிகிறது. இப்படிப்பட்ட சிறு கட்சிகளும், இயக்கங்களும், மக்கள் வேட்பாளர்களும் இந்த அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற முயற்சி மிகவும் முக்கியமானதாகும். இப்படிப்பட்ட மக்கள் இயக்கங்கள் அனைத்திந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் பலர் இருக்கிறார்கள். அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து எப்படி ஒரு இயக்கமாக மாற்றுவது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
இன்று அரசாங்கத்தின் உண்மையான அக்கறையற்ற போக்கின் காரணமாக கொரோனா இரண்டாவது அலையாக எங்கும் தலைவிரித்தாடுகிறது. சென்னை உட்பட எல்லா பெரு நகரங்களிலும் மக்கள் மிக மோசமான நிலைமைகளில் இருந்து வருகிறார்கள். மருத்துவத்தை தனியார்மயப்படுத்தியதன் விளைவாக மக்கள் மிக மோசமானப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்கள். வாக்களிப்பைத் தவிர ஆளுமையில் மக்களுக்கு எவ்விதமான பங்கும் இல்லை. செயலாக்கத் துறையின் கைகளில் இருக்கும் அதிகாரத்தை மாற்றி மக்கள் கைகளில் அதிகாரத்தைக் கொண்டு வருவதற்காக மக்களாட்சி இயக்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது.
1993-இல் பாபரி மசூதி இடித்து தகர்க்கப்பட்ட நிலையில் எல்லா கட்சிகளும் வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடி வந்த நிலையில் மக்களாட்சி இயக்கம் உருவாக்கப்பட்டது. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ், நீதிபதி எச்.சுரேஷ், திரு டி.எஸ்.சங்கரன் மற்றும் பலர் மக்களாட்சி இயக்கத்தைக் கட்டியமைக்க பங்களித்திருக்கிறார்கள். இந்த அமைப்பு குறித்தும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் மக்கள் தேவைகள் குறித்தும் பல்வேறு வேலைகளை மக்களாட்சி இயக்கம் தொடர்ந்து செய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும், எல்லா இடங்களிலும் மக்கள் குழுக்களை அமைத்து அந்தந்தப் பகுதி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மக்களாட்சி இயக்கம் வேலை செய்து வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இதையொட்டிய கருத்துக்களைக் கூற வேண்டுகிறேன்.
இதைத் தொடர்ந்து திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு ரவி சுப்பரமணியன் பேசினார். மக்களுடைய அன்றாடப் போராட்டங்களில் பங்கேற்பதோடு, சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் மக்களுடைய பிரச்சனைகளை எழுப்புவதற்காக தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் போட்டியிட்டு வருகிறோம். அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக திருப்பூரில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பிற மக்களும் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். பிற்போக்கு மதவாத சக்திகளும், கார்பரேட் சக்திகளும் கொள்ளையடிப்பவர்களும் ஒன்றுகூடி இருக்கிறார்கள். ஆனால் மக்களுக்காக தியாகங்கள் செய்தவர்களும், போராடி வருபவர்களும் சிதறுண்டு கிடக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சி பிளவுபட்டதில் துவங்கி, முற்போக்கு சக்திகள் பிளவுண்டு கிடக்கின்றன. இந்தத் தேர்தல் முறையே மிகவும் மோசமான முறையாக, பணக்காரர்களுக்கும் மக்களை ஏமாற்றுபவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் சாதகமாக இருக்கிறது. எனவே ஒரு விகிதாச்சார முறை வேண்டும். இந்தத் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாம் போராட வேண்டும். நாடெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளெல்லாம் ஒன்றுபட வேண்டும்.
அடுத்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் சென்னை சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு எம்.எல்.ரவி அவர்கள் பேசினார். முதலாளிகளுடைய நலனையொட்டி இன்று அரசியல் நடைபெற்று வருகிறது. நாங்கள் சாமானியனுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட்டோம். திமுக, அதிமுக என இரு கூட்டணிகளுமே பணத்தை அள்ளி வீசுகிறார்கள். பாஜக ஒவ்வொரு தொகுதியிலும் 3 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது. காஞ்சி தொகுதியில் எங்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட முன்வந்த ஒரு சாதாரண பெண்மணியின் வேட்புமனு தமிழில் எழுதப்பட்டதால் தேர்தல் அதிகாரி அதை நிராகரித்துவிட்டார்.
நிரந்தர தேர்தல் சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சிகளுக்கு சலுகைகள், மற்ற வேட்பாளர்களுக்கு இல்லை. தேர்தல் ஆணையம் ஓரிரு பெரிய கட்சிகளைத் தவிர மற்றவர்கள் பெரிய கட்சிகளாக ஆகக் கூடாதென நினைக்கிறது. அதற்காக அவர்கள் பாரபட்சமாக பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். பல கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்தப் பெரிய கட்சிகள் தேர்தல் செலவு குறித்துக் காட்டும் கணக்குகள் ஏமாற்றுத்தனமானவையாகும். முதலாளித்துவம் தேர்தலை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதும், தேர்தல் சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதும் முக்கியமானதாகும்.
இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டு ஒர்கர்ஸ் பார்ட்டியின் நாகர்கோயில் வேட்பாளராக போட்டியிட்ட திரு மகிழ்ச்சி தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குமரி மாவட்டத்தில் தொழில் வளம் இல்லை. வாழ்வாதாரம் தேடி மக்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டுமென்றும், ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்தோம். சாதி, மதம், பண பலம், திரைப்பட கவர்ச்சி, ஊடகங்களுடைய மூளைச் சலவை, வலதுசாரிகளுடைய பாசிச போக்கு, இலவசங்கள் போன்றன தேர்தலில் முக்கிய பங்காற்றுகின்றன. இங்கு தேர்தல்கள் நியாயமான முறையில் நடக்க முடியாது. பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் நம்மைப் போன்ற இயக்கங்கள் தேர்தலில் நிற்க முடிகிறது. நம்மில் பலரும் முதலாளித்துவம் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதைச் சீர்திருத்தும் முயற்சியிலேயே ஈடுபடுகிறோம். தேர்தலில் பங்கேற்பதன் மூலம் நமது அரசியலை நாம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களை நாம் திரட்ட வேண்டும். முதலாளித்துவ கட்சிகள் பின்னால் சென்றால் நம்மால் ஒரு சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. பிளவுபட்ட கம்யூனிஸ்டு கட்சிதான் பல பிரச்சனைகளுக்கும் காரணமென தோழர்கள் குறிப்பிட்டது சரியே. கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும்.
சைதாப்பேட்டைத் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு சிவஞானசம்பந்தம் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். காந்திய சமதர்மத்தை நிலைநாட்டுவது, மது விலக்கை அமல்படுத்துவது, ஊழலும் சுரண்டலும் இல்லாத ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவது என்ற முக்கிய நோக்கங்களை முன்வைத்து நாங்கள் போட்டியிட்டோம். நாட்டை சீரழித்து வந்துள்ள அதிமுக, திமுக கட்சிகள் மட்டுமின்றி அதே போன்ற கொள்கைகளைக் கொண்ட மற்ற கட்சிகளோடும் எங்களால் இணைய முடியாது. பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், கட்சிகளோடு கூட்டாக தேர்தலை நாங்கள் சந்தித்தோம். தேர்தல் ஆணையமே இரண்டு பெரும் கூட்டணிகளுக்கு ஆதரவாகவும், மற்ற சிறிய கட்சிகள் – இயக்கங்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு எதிராகவும் அவர்களை நசுக்குகின்ற முறையிலும் செயல்படுகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். 1952-இல் கம்யூனிஸ்டுகள் மிகப் பெரிய சக்தியாக இருந்தனர். ஆனால் பின்னர் பிளவுபட்டு, முதலாளித்துவ கட்சிகளுடைய பின்னால் செல்லத் தொடங்கிய காரணத்தால் தங்களுடைய மதிப்பை இழந்தனர். முதலாளித்துவ கட்சிகளோடும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளோடும் சமரசம் செய்து கொண்டால் மார்க்சிசம் கண்டிப்பாக வெற்றிபெற முடியாது. எந்தச் சூழ்நிலை வந்தாலும், வலதுசாரி சக்திகளோடும், முதலாளித்துவ சக்திகளோடும், பிற்போக்கு சக்திகளோடும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
விவசாயிகளுக்காகவும், தமிழ் மொழியின் நலனுக்காகவும் போராடி வருகின்ற தோழர் பனசை அரங்கன், நன்னிலம் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர். காங்கிரசு போன்ற முதலாளித்துவ கட்சிகள் தேர்தலில் வன்முறையை பயன்படுத்துகிறார்கள். மக்களுடைய பிரச்சனைகளைத் திசை திருப்புகிறார்கள். நாம் பொதுப் பிரச்சனைகளைத் தாண்டி அந்தந்தத் தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளைப் பெரும்பாலும் மையப்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் முதலாளித்துவத் தேர்தல் அமைப்பு முறை என்பதில் ஐயமில்லை. விவசாயிகள் சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம், தமிழ்நாட்டின் விவசாயத்தை சீரழித்திருக்கிறது. நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மண் சார்ந்த, மொழி சார்ந்த மார்க்சிசம் மட்டுமே மக்களிடையே வளர்ச்சி பெறும்.
சிவகங்கைத் தொகுதியில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் தோழர் குணசேகரன். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு பெருவாரியான வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக சட்டமன்றத்திற்கும் கம்யூனிஸ்டுகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரசும் பிற வலதுசாரி சக்திகளும் இராஜாஜி-யை முன்வைத்து தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுத்தனர். பின்னர் கம்யூனிஸ்டு இயக்கம் பிளவுபட்டதும், பல கூறுகளாக உடைந்ததும் மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது. உலக அளவில் நிதி மூலதனம் ஒன்றுபட்டு நின்று மக்கள் மீது தாக்குதலை நடத்துகின்ற சூழலில் கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு சிதறுண்டு நிற்பதும் நமது சக்தி விரயமாவதும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இந்த பெரிய கட்சிகள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 30 கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள். அரசியல், சாதி, மதம் போன்ற காரணிகள் 40 விழுக்காடு அளவிற்கு செல்வாக்கு செலுத்துகின்றன. 60 விழுக்காடு பணத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிலைக்கு தேர்தலின் தரம் சீரழிந்து தாழ்ந்திருக்கிறது. இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? சனநாயக சக்திகளும், மாற்றம் விரும்பும் சக்திகளும் தேர்தல் சீர்திருத்தங்களைக் கோர வேண்டும். விகித்தாச்சார அடிப்படை உட்பட பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். ஒரே இடத்தில் எல்லா வேட்பாளர்களும் தத்தம் கருத்துக்களை முன்வைக்கும் வகையில் தேர்தல் பரப்புரை நடத்தப்பட வேண்டும். பண பட்டுவாடா நிறுத்தப்பட வேண்டும். இடதுசாரி கட்சிகள், சிந்தனையுள்ளவர்கள் அனைவரும் கூடி தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் சமுதாயத்தை எப்படி மறு சீரமைப்பு செய்வது என்பது குறித்தும் விரிவாகப் பேசவும், ஒன்றுபட்டு நிற்கவும் செய்ய வேண்டும்.
விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு பிரபாகரன் உரையாற்றினார். என்னுடைய தொகுதியில் இந்தக் கட்சிகள் 150 கோடிக்கும் அதிகமான பணம் செலவழித்தனர். பணத்தை பல வாக்காளர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஊடகங்கள் பெரிய கட்சிகளுக்கு ஆதரவாகவும், சிறிய – சுயேச்சை வேட்பாளர்களைப் புறக்கணிப்பதாகவும் மிகக் கேவலமான முறையில் நடந்து கொள்கிறார்கள். கருத்துக் கேட்பு, விவாதம் என்ற பெயரில் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்துவதற்கு ஊடகங்கள் ரூ 10 – 20 இலட்சங்கள் கோருகின்றனர். தேர்தலையொட்டிய கடைசி நாட்களில் பணப் பட்டுவாடா நடைபெறுகிறது. மக்களை சரியான அரசியலுக்கு எப்படிக் கொண்டு வருவதென்பது ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது.
பின்னர் பேசிய தோழர் மாந்தநேயன், இந்த பாராளுமன்ற அமைப்பு பண பலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பெரும் முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த அமைப்பில் உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற முடியாது. இந்த முதலாளித்துவ அமைப்பைச் சீர்திருத்தவும் முடியாது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
அனைவரும் தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பின்னர், மக்களாட்சி இயக்கத்தின் செயற்பாட்டாளர் திரு பாஸ்கர் அந்த கருத்துக்களைத் தொகுத்து உரையாற்றினார்.
தேர்தலில் நிற்பதற்கு வைப்புத் தொகை 10-15 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது. தேர்தலில் வேட்பாளர் செலவழிக்கும் தொகைக்கு உச்ச வரம்பாக ரூ 70 இலட்சம் வைக்கப்பட்டிருப்பதன் மூலம் கோடிக்கணக்கான தொகை தேர்தலில் செலவிடப்படுவதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது. இந்த கோடிக்கணக்கான ரூபாய் தொகையை சாதாரண தொழிலாளியால் எப்படி செலவழிக்க முடியும். வேட்பாளரை முன்மொழிவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு 1 வாக்காளரும், பிற கட்சிகள் – சுயேச்சை வேட்பாளருக்கு 10 வாக்காளர்கள் தேவைப்படுகிறார்கள். இங்கே பேசிய பெரும்பாலான வேட்பாளர்கள், தேர்தல் ஆணையம் பெரும் தொழிலதிபர்களுடைய ஆதரவு பெற்ற பெரிய கட்சிகளுக்கு ஆதரவாகவும், மற்ற எல்லா வேட்பாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மதிக்காமல் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இவையெல்லாம் தேர்தல் வழி முறையிலும், இந்திய சனநாயகத்திலும் அனைவரும் சமம் என்பது கேலிக் கூத்தென தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.
தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நேரத்திலும் இலாப நட்ட பேர அடிப்படையிலும், பெரும் தொழிலதிபர்கள் விரும்பும் வேட்பாளர்கள், இவிஎம் உட்பட பல்வேறு வழிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள். இந்த கோரமான வழிமுறைகள் தான் இந்திய சனநாயகத்தின் உண்மையான முகமாகும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் முதலாளிகள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நிதி வழங்குகிறார்கள். எந்த முதலாளி எந்தக் கட்சிக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது பொது மக்களுடைய கண்களிலிருந்து மறைக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரத்திற்கு வரும் கட்சிகள், தங்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்த முதலாளிகளுக்கு இந்திய மக்களுக்குச் சொந்தமான இரயில்வே போன்ற பொதுத் துறை நிறுவனங்களை வாரி வழங்குகிறார்கள்.
இவையனைத்தும் தேர்தலிலும் ஆட்சி அமைப்பிலும் மக்களுடைய குரல் எடுபடுவதற்கு, பல்வேறு அடிப்படையான சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்துகின்றன.
மக்களாட்சி இயக்கம் பல ஆண்டுகளாக வேட்பாளர்களைத் தேர்வு செய்தல், தேர்தல் செலவுகளை தனிபட்டவர்களும், கட்சிகளும் செய்ய விடாமல் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமாக அரசே ஏற்பாடு செய்ய வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திருப்பியழைக்கும் உரிமை, சட்ட முன்வரைவுகளை மக்களே முன்வைக்க உரிமை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் எல்லா முக்கிய பிரச்சனைகளிலும் மக்களுடைய கருத்தைக் கேட்டு முடிவு செய்தல் போன்ற பல சீர்திருத்தங்களை முன்வைத்து விழிப்புணர்வை வலியுறுத்தி வேலை செய்து வருகிறது என்று திரு பாஸ்கர் விளக்கிக் கூறினார். மக்களுடைய கைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு செல்வதற்காக மக்கள் குழுக்களை ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளிலும், வேலை செய்யுமிடங்களிலும் உருவாக்க நாம் அனைவரும் வேலை செய்ய வேண்டுமென அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய கருத்தரங்கை மாதத்திற்கு ஒரு முறை ஏற்பாடு செய்ய வேண்டுமென கூறி திரு இராகவன் கூட்டத்தை முடித்து வைத்தார்.