தலை நகரில் வேளாண்மக்களின் போராட்டம் நடைபெற்று வரும் இவ்வேளையில், வேளாண்மையின் அடிப்படை பிரசினை என்ன, அதற்கு தீர்வு என்ன என்று பார்ப்போம்.

காலகாலமாக ஒரு நாட்டின் GDP என்பதே கிட்டத்தட்ட முழுவதுமே வேளாண்மையால் தான் இருந்தது. மற்ற தொழில்களின் பங்கு மிக சொற்பமே. தொழிற்புரட்சியின் காரணம் இந்த நிலைமை மாறிவந்தது. இந்தியாவில் 1947 முதல் தொழிற்புரட்சி பெருமளவு நிகழ்ந்த போதும், அது வேளாண்மைக்கு ஆதரவாகவும் இருந்தது. வேளாண் புரட்சியும் கூடவே நடந்தும் வந்தது. 1970 களிலிருந்து இந்த நிலைமை சிறிது சிறிதாக மாறத்துவங்கியது. வேளாண்மை மதிப்பிழந்து வந்தது. 1991 – 92 இல் நரசிம்ஹ ராவ் – மன்மோஹன் சிங்க் கொண்டு வந்த தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்ளை (அது கொள்கை அல்ல, கொள்ளைதான்) வேளாண் தொழிலின் மீது மரண அடியாக விழுந்தது. ஆம் அப்போது துவங்கி 30 ஆண்டுகளாக, இன்றுவரை சராசரியாக ஆண்டுக்கு 17000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு வருகின்றனர். காரணம் நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிக்கு அவன் உற்பத்திச் செலவில் ஒரு மிகச்சிறிய பங்கே வேளாண் பொருட்களுக்கு விலையாக (லாபம் அல்ல, வருமானம் அல்ல) கிடைக்கிறது. பெருத்த நஷ்டத்தில் விற்று விற்று ஒரு நிலையில் தன்னையே மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கிறது நம் ‘அன்ன தாதா’ க்களின் சமுதாயம்.

காரணம் இந்த காலகட்டத்தில் வேளாண்மையில் கூலித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்ந்த அளவு கூட விளைபொருட்களின் விலை உயரவில்லை. உற்பத்தி செலவு பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் சந்தை விலையோ, குறைந்த பக்ஷ ஆதார விலையோ அதில் ஒரு சிறு பங்குதான் உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் நுகர்வோருக்கு உணவுப் பொருட்களை வேளாண்மக்கள் 80% போல் சப்சிடியில் விற்று தம்மையே மாய்த்துக் கொண்டு வருகின்றனர். நாம் உண்ணும் அரிசி, கோதுமை, பருப்புக்களின் விலை உறுபத்திச் செலவை விட மிகக் குறைவு. அதிலும் இடைச்செலவு போக ஒரு சிறு பகுதியே விவசாயியைப் போய் சேர்கிறது. காய்கறிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவற்றை பறிக்கும் செலவு கூட விவசாயிக்கு விலையாகக் கிடைப்பதில்லை. கிலோ 50 பைசா, ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டிய அவல நிலை. நடுத்தரகர்கள், வ்யாபாரிகள் அதையே 40 – 50 ரூபாய்க்கு விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதற்குத் தீர்வு வேளாண் பொருட்களுக்கு ஆலைபொருட்களுக்கு செய்யும் முறையில் உற்பத்திச் செலவு கணக்கிட்டு, அதன் மேல் ஒரு சிறு லாபத்துடன் விலை நிர்ணயம் செய்து அளிக்க வேண்டும். இடுபொருள் செலவு, வெளியாட்கள் கூலி தவிர, உரிமையாளர் அல்லது குத்தகைதாரர், அவர் குடும்பத்தினர் செய்யும் வேலைக்கும் – மேற்பார்வை, பயிர்க்காவல், சந்தைப் படுத்துதல், விதை உரம் வாங்க செலவழிக்கும் நேரம் உள்பட – கூலி கணக்கிட வேண்டும். நில உரிமையாளரே பயிரிட்டாலும் நிலக் குத்தகையையும் செலவாகக் கணக்கிட வேண்டும். சந்தைப்படுத்தும் செலவு, போக்குவரத்து, பொருள் விரையம், என்ற எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிட வேண்டும். மொத்தத்தில் செய்கூலி, சேதாரம் எல்லாம் சரிவர கணக்கிட வேண்டும். வரட்சி, வெள்ளம், பூச்சி தாக்கம், நேரத்தில் கிடைக்காத இடுபொருள், கூலித் தொழிலாளர்கள் போன்ற பல காரணங்களால் விளைச்சல் எப்போதும் சீராக இருப்பதில்லை. 5 அல்லது 10 ஆண்டுகளுக்கான சராசரி விளைச்சலுக்கு மேற்கண்ட செலவு என்று கொண்டு சரியான உற்பத்திச் செலவும் அதன் காரணம் விற்பனை விலையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது, ‘குறைந்த பக்ஷ ஆதார விலை’ க்கு பதில் ‘நியாயமான கட்டுப்படியாகும் விலை’ நிர்ணயித்து வழங்க வேண்டும். அதுவும் நெல், கரும்புக்கு மட்டுமின்றி, பருப்புப்பயறு, காய்கறிகளுக்கும்.

இந்த வேளாண் விளை பொருட்களை ஆவின், அமுல் போன்ற ‘வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம்’ மூலம் மட்டுமே சந்தைப் படுத்த வேண்டும். அந்த சங்கங்களின் கட்டுப்பாட்டிலேயே நெல் அரவை நிலையங்கள், எண்ணை செக்குகள், பழச்சாறு ஆலைகள் என உணவுப்பொருள் ஆலைகளும், கிடங்களும் இயங்க வேண்டும். இந்த சங்கங்கள் விவசாயிக்கு கடன் வழங்கி, ட்ராக்டர், அறுவை மெஷின், பூச்சி மறுந்து அடிக்கும் கருவி யெல்லாம் வாடகைக்கு அளிக்கும். விளைபொருளை ந்யாயமான கட்டுப்படியாகும் விலையில் கொள்முதல் செய்யும்.

இதை செய்தால் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு வரும். நஷ்டத்தில் தத்தளிக்கும் விவசாயம் லாபகரமானதாக மீண்டும் மாறும். பயிரிடும் நிலப்பரப்பும், போகமும் அதிகரிக்கும். உணவுப் பொருட்களின் பற்றாக்குறை அகலும். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்வது மாறி நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு மக்கள் குடிபெயர்வர். கிராமீய மக்களும் நகர மக்கள் போல் பல ஆலைப் பொருட்களையும் நுகர வாய்ப்பு ஏற்படும். வீடுகள் கட்டுவார்கள், புதுப்பிப்பார்கள், விஸ்தரிப்பார்கள். வாஹனகள், டீவீ ஃப்ரிட்ஜ் வாங்குவார்கள். அதனால் வேலை வாய்ப்பு கிராமங்களில் மட்டுமின்றி நகர ஆலைகளிலும் வெகுவாக பெருகும். வேலையில்லா திண்டாட்டம் விலகும். ஜாதி அடிப்படை இட ஒதுக்கீட்டுக்கு தேவை அகலும். பிறிவினைகள் அகலும். தள்ளுபடி விலை, இலவசங்களுக்கு தேவை இருக்காது. மொத்தத்தில் சுபீக்ஷம் அடைவோம்.

இதற்கு எதிர்மரையானது தான் தற்போதைய அரசின் போக்கு. இந்தச் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை. உண்ண மட்டும் தெரிந்த – உற்பத்தி செய்யத் தெரியாத – அனைத்து நுகர்வோரையும் கூட சேர்த்து, மற்றும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் அனைவரையும் கூட சேர்த்துதான் பாதிக்கபோகிறது. நாடு மொத்தத்தையும் ஒரு சில தொழிலதிபர்கள், பண மூட்டைகளுக்கு அடிமையாக்கும் முயற்சிதான் இது. இதை எதிர்ப்பது உணவு உண்ணும் அனைவரின் கடமையும் ஆகும்.

Raja Rajan   

(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)

President – Gandhian Initiative for Social Transformation – Chennai

 

By admin