அயோத்தி பாபரி மசூதி தகர்க்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன. பாபரி மசூதி தகர்க்கப்பட்டது, மனித இனத்திற்கு எதிரான ஒரு குற்றம் என்று மத நம்பிக்கைகளை கடந்த அளவில் நமது நாட்டு மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக அதைக் கண்டனம் செய்து வந்திருக்கின்றனர். நமது மக்களுடைய ஒரு பாரம்பரியத்தை வெட்கமின்றி தகர்த்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
பாபரி மசூதி தகர்க்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சியும் எதிர்க் கட்சியாக இருந்த பாஜகவும் நாடு முழுவதும் வகுப்புவாத வெறியைத் தூண்டி விடுவதில் கூட்டாகச் செயல்பட்டனர். பாபரி மசூதியைத் தகர்க்க வேண்டும் என இந்தியாவெங்கும் பாஜக வெளிப்படையாகவே ஒரு இயக்கத்தை நடத்தியது. மத்தியில் இருந்த காங்கிரசு அரசாங்கமும், உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்திய பாஜகவும் மசூதி இடிக்கப்படுவதை பாதுகாப்பு படைகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்தனர். இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களுக்கு கண் எதிரிலேயே இந்த குற்றச் செயலைச் செய்யுமாறு பாஜகவின் முன்னணி தலைவர்கள் கும்பலைத் தூண்டி விட்டனர்.
இஸ்லாமிய மதத்தினர் அனைவரையும் அவமானப்படுத்துகிற நோக்கத்தோடுதான் பாபரி மசூதி தகர்க்கப்பட்டது. அது, நமது மக்களுடைய ஒற்றுமையை உடைக்கும் நோக்கத்தில் நமது சமுதாயத்தின் இதயத்திலே குத்தப்பட்ட கத்தி ஆகும். இந்த குற்றச் செயலுக்கு அரசு எந்திரமாகிய – மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசாங்கங்களும், உளவு நிறுவனங்களும், காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளும் தான் பொறுப்பானவர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் இந்த சமூக விரோத, தேச விரோத குற்றத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
கடந்த 26 ஆண்டுகளாக குழப்பமும் வன்முறையும் அதிக அளவில் தீவிரமடைந்து வருகிறது. முஸ்லீம் நம்பிக்கை கொண்ட மக்கள் தொடர்ந்து வகுப்புவாத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறார்கள். எல்லா முஸ்லிம்களும் “பயங்கரவாதிகளாகவும்” “பாகிஸ்தானுடைய ஏஜண்டுளாகவும்” பழிதூற்றப்படுகிறார்கள். அப்பாவி இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (பொடா), சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (ஊபா) போன்ற கருப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படும், சித்திரவதை செய்யப்பட்டும் வருகிறார்கள். மேலும் பலர் போலி எதிர்மோதல்களில் கொல்லப் பட்டிருக்கிறார்கள். “பசுவை பாதுகாப்பது” என்ற பெயரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மத நம்பிக்கைகளைக் கடந்த அளவில் எல்லா மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்ய அரசு தவறிவிட்டது.
பாபரி மசூதி கட்டப்பட்டுள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்ற சொத்து பிரச்சனை குறித்த விசாரணையை அக்டோபர் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. வழக்கு விசாரணையை ஒத்திவைத்து இருப்பதைப் பயன்படுத்தி வகுப்புவாத பதற்றம் தூண்டி விடப்படுகிறது. அந்த இடத்தில் உடனடியாக ராமர் கோவிலை கட்டவேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஒரு வரலாற்று நினைவுச் சின்னத்தை பாதுகாக்கவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும், ஆயிரக்கணக்கான தன்னுடைய சொந்த குடிமக்களுடைய உயிரைப் பாதுகாக்கவும் இந்திய அரசு ஏன் தவறிவிட்டது என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.
நமது மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். வகுப்புவாதமும் அரசியலை குற்றவியலாக ஆக்குவதும், அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதும் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் பிடித்தமான முறைகளாக ஆகி வருகின்றன. அதிகாரத்திற்கு வருவதற்கும், அதில் தொடர்ந்து நீடிப்பதற்கும் வகுப்புவாத படுகொலைகளை திட்டமிட்டு நடத்துவது உட்பட எந்த எல்லைக்கும் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் போவார்கள் என்று காட்டியிருக்கின்றனர். அவர்களுடைய நடவடிக்கைகள், நம்முடைய மக்களுடைய ஒற்றுமைக்கும் ஐக்கியத்திற்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.
பாபரி மசூதியை வெறும் சொத்துப் பிரச்சனையாகப் பார்க்க முடியாது. வருகின்ற தலைமுறைகளுக்கு நாம் எப்படிப்பட்ட இந்தியாவை விட்டுச் செல்லப் போகிறோம் என்பது பிரச்சினையின் மையக் கேள்வியாகும். அனைவருடைய வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்ற கருத்தை இந்திய மக்கள் உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறார்கள். அவலமான நிலைமை என்னவென்றால் இன்றைய அரசு தன்னுடைய இந்தக் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது என்பதாகும்.
மக்களை விலையாகக் கொடுத்து பெரும் தொழில் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டி வருவதை அரசு உறுதி செய்து வருகிறது. பெரும் தொழில் நிறுவனங்களுடைய ஆதரவு பெற்ற கட்சிகளிடம் மட்டுமே அரசாங்கம் ஒப்படைக்கப்படுவதை அரசியல் வழிமுறை உறுதி செய்து வருகிறது. அப்படிப்பட்ட கட்சிகள், மக்கள் தங்களின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதைத் தடுப்பதற்காக மதம், சாதி, பகுதி அல்லது மொழி போன்ற அடிப்படைகளில் வெறியைத் தூண்டிவிட்டு வருகின்றனர்.
வகுப்புவாத வன்முறையும் அரசு பயங்கரத்தையும் கட்டவிழ்த்து விடுவதற்காக அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் அரசு எந்திரத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரிகள் மிகவும் மோசமான குற்றங்களை செய்தாலும் குடிமக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறினாலும் அவர்களை தண்டிப்பதற்கு மக்களுக்கு எந்த வழிமுறையும் இல்லை. இன்றைய அமைப்பில் மக்கள் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள்.
வகுப்புவாத வன்முறைக்கும், அரசு பயங்கரத்திற்கும், பல்வேறு வழிகளில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கும் முடிவு கட்டுகின்ற நீதிக்கான போராட்டத்தில் மக்களாட்சி இயக்கம் உறுதியாக நிற்கிறது. இந்தப் போராட்டம், மக்களுடைய அதிகாரத்திற்கான போராட்டத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது.
“ஒருவர் மீது தாக்குதல் அனைவர் மீதும் தாக்குதல்!” என்ற கோட்பாட்டை உறுதியாக உயர்த்திப் பிடித்து நம்முடைய ஒற்றுமையை வலுப்படுத்துவோம். வகுப்புவாத வன்முறையாலும், அரசு பயங்கரத்தாலும் பாதிக்கப்பட்டவர்களை “தேச விரோதிகள்” என்றும் “பயங்கரவாதிகள்” என்றும் ஆட்சியாளர்களும், பெரும் தொழில் நிறுவன ஊடகங்களும் சித்தரிக்கும் முயற்சிகளை நாம் கடுமையாக எதிர்ப்போம்.
26 ஆண்டுகளுக்கு முன்னர் பாபரி மசூதியைத் தகர்த்தெறிந்து வகுப்புவாத படுகொலைகளைத் தூண்டி விட்டு நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென நீதி கோருகிறது.
நீதிக்காகவும், வகுப்புவாத வன்முறை மற்றும் அரசு பயங்கரத்திற்கு முடிவு கட்டுவதற்காகவும் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
நம்முடைய ஒற்றுமையை உடைக்க ஆட்சியாளர்கள் எடுக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்!
மக்கள் கைகளில் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காகப் போராடுவோம்!
மக்களாட்சி இயக்கம்
இணையம் www.lokraj.org.in 4/795, அண்ணா நகர், கொட்டிவாக்கம், சென்னை 600041 கைபேசி 7598069667