மிகுந்த துயரத்தோடும், வேதனையோடும் மக்களாட்சி இயக்கத்தினுடைய மிகவும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட செயல்வீரர்களில் ஒருவரான திரு.டி.எஸ்.சங்கரன் அவர்கள் தன்னுடைய 86-ஆவது வயதில் சென்னையில் டிசம்பர் 15, 2012 அன்று மறைந்துவிட்டதை மக்களாட்சி இயக்கத்தினுடைய அனைத்திந்திய குழு அறிவிக்கிறது. அவர் இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சரவையின் முன்னாள் கூடுதல் செயலாளராகவும், தமிழக அரசின் வருவாய்த்துறை வாரியத்தின் முதல் உறுப்பினராகவும், தமிழக அரசின் தொழிலாளர் துறை ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் அவர், மக்களாட்சி இயக்கத்தின் முதல் தலைவராகவும், தனது மறைவின் போது அதனுடைய சிறப்புத் தலைவராகவும் இருந்திருக்கிறார். 

மக்களுடைய மனிதராகவும், மக்களாட்சி இயக்கத்தின் முன்னோடியாக இருந்த மக்களதிகாரக் குழு 1993-இல் நிறுவப்பட்டபோது அதற்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தவர்களில் ஒருவராகவும் இருந்த இவருடைய நினைவுக்கு அனைத்திந்திய குழு வணக்கம் செலுத்துகிறது. மக்களதிகாரக் குழு மக்களாட்சி இயக்கமாக 1999-இல் மாறுவதற்கு அவர் கருவியாக செயல்பட்டவர் ஆவார். நம்முடைய அமைப்பின் முதல் தலைவராக முன்னணியிலிருந்து அதை அவர் வழி நடத்தினார். அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பால் நம்முடைய அமைப்பைப் போலவே, வருந்தும் அவருடைய அன்பு மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் அனைத்திந்திய குழு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திரு.சங்கரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள தாருவை கிராமத்தில் விழிப்புணர்வு மிக்க குடும்பத்தில் 1926 சனவரி 4 அன்று பிறந்தார். அவர் தன்னுடைய பிறந்த மண் மீதும், தன்னுடைய தாய் மொழி, பண்பாட்டின் மீதும் அளவில்லாத அன்பும் அக்கறையும் கொண்டிருந்த அதே நேரத்தில், இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களுடைய முன்னேற்றத்திலும் ஆர்வமும் உறுதியும் கொண்டிருந்தார். அவர் நேசித்த அந்த நதியைப் போலவே அவர் தூய்மையான இதயம் கொண்டிருந்தார். அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய ஒரு இந்தியாவை தனது வாழ்நாள் கனவாகக் கொண்டு இடைவிடாமல் புத்துணர்வோடும், ஊசலாட்டமின்றியும் உழைத்தார். அவருடைய சொந்த கிராமத்தினுடைய முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக அவர்களுடைய நேசத்திற்கு உரியவராக அவர் இருந்ததில் வியப்பேதுமில்லை.

ஒரு உயர் அதிகாரிக்கு வழக்கமாக இருக்கும் எவ்வித பகட்டும், அதிகார தோரணையும் அவருக்கு இருந்ததில்லை. அவர் எப்போதும் தன்னடக்கமும், அன்பும், புதியனவற்றை அறிந்து கொள்வதில் பேரார்வமும் கொண்டவராகவும், மக்களுக்குக் கடமைப்பட்டவராகவும் இருந்தார். அதனால் தான் அவருடைய ஆலோசனையைப் பெறுவதற்காகவும், தங்களுடைய முயற்சிகளுக்கு அவருடைய ஆதரவைப் பெறுவதற்காகவும் எல்லா பகுதிகளிலிருந்தும், மதங்களிலிருந்தும் அமைப்புக்களிலிருந்தும், அரசியல் கட்சிகளிலிருந்தும் மக்கள் அவருடைய இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். அந்த மக்களை அவர் எப்போதும் ஏமாற்றமடையச் செய்ததில்லை. சரிநிகரான உரிமைகளுக்காகப் போராடும் பெண்களாகட்டும், சமூகப் பாதுகாப்பு கோரும் தொழிலாளர்களாகட்டும், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என நீளும் பட்டியலில் அவர்களுடைய கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கும் வரை அவர்களுக்கு தன்னுடைய அளவுகடந்த ஆதரவையும், அறிவுரையும் அவர் வழங்கினார். அவருடைய கூர்மையான நினைவாற்றலும், அறிவுக் கூர்மையும் பலராலும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. அது பல்வேறு பிரிவு மக்களிடையே அவருடைய புகழுக்கு வழிவகுத்தது.

மறைந்த இந்த சாதனையாளருக்கு நாமளிக்கும் மிகச் சிறந்த புகழாரமானது, முரண்பாடற்ற அவருடைய சொற்களையும், செயல்களையும் நினைவு கூர்வதாகும்.

பாபரி மசூதி உடைத்து நொருக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசியல் பெரிய அளவில் குற்றவியலாக்கப்பட்ட நேரத்தில், மக்கள் அதிகாரத்திற்கான குழு நிறுவப்படுகையில், தனக்கே உரிய அச்சமற்ற முறையில் அவர் கூறினார் – "இன்றிருக்கும் அரசியல் வழிமுறையானது, பெரும்பான்மையான மக்களை எண்ணெற்ற வழிகளில் அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறதென மக்களதிகாரக் குழு கருதுகிறது. அனைவருடைய விதியை பாதிக்கக் கூடிய தீர்மானங்களை எடுக்கக் கூடிய அதிகாரம் சிறப்புச் சலுகை பெற்ற சுயநலமான மேல்தட்டு மக்களின் கைகளில் இருக்கிறது. நமது மக்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க வேண்டுமெனவும், அவர்களால் இது முடியுமெனவும் மக்களதிகாரக் குழு நம்புகிறது. இது மட்டுமே நிகழ்வுகளின் போக்கை மாற்றி, நமது நாட்டையும், உலகிலுள்ள சிறந்த, முற்போக்கான நாடுகளில் ஒன்றாக இடம்பெற வழிவகுக்கும். மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்குவதற்கு அரசியல் அமைப்பில் தேவையான மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும். இதை உறுதி செய்வது நம் அனைவரின் கைகளிலும் இருக்கிறது".
திரு.சங்கரன் அவர்கள் ஒரு சிறந்த அரசியல் சிந்தனையாளர். மனித உரிமைகளைப் பற்றியும், இந்தியாவில் சனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்தும் விவாதங்களில் அவர் தெள்ளத் தெளிவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். 2002-இல், மக்களாட்சி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த உரிமைகள் பற்றிய அனைத்திந்திய கருத்தரங்கில், அவர் அளித்த சுருக்கமான ஆனால் ஆழமான துவக்கவுரையில், இந்தியாவில் முழுமையான சனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற பணியில் மக்களாட்சி இயக்கம் ஈடுபட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அரசியல் சட்டத்தில் இந்திய மக்களுடைய அனுபவம் பற்றி ஒரு அனைத்திந்திய கருத்தரங்கை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற மக்களாட்சி இயக்கத்தின் முடிவு பற்றி குறிப்பிட்ட அவர், உரிமைகள் பற்றிய இந்த அனைத்திந்திய கருத்தரங்கானது இந்தத் திசையில் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய செயலூக்கமாகும் என்பதைச் சுட்டிக் காட்டினார். உரிமைகள் பற்றிய பிரச்சனையும், இந்த உரிமைகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய பிரச்சனையும், எந்த ஒரு அரசியல் சட்டத்தின் அடித்தளமாக இருக்கிறது. இது வெறும் கோட்பாட்டளவிலான விவாதமல்ல, மாறாக இந்தியாவிலும், உலக அளவிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் மையமாகும். தனிநபர்களுடைய உரிமைகள் மற்றும் தொகுப்புக்களுடைய உரிமை ஆகியவற்றைப் பற்றிய ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கு தீவிரப் பங்களிக்குமாறு பங்கேற்றவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

1999-இல் மக்களாட்சி இயக்கம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அவர் அதனுடைய முதல் அனைத்திந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005-இல் மூன்றாவது பேரவை வரை, அவர் மக்களாட்சி இயக்கத்தின் தலைவராக நீடித்தார். பின்னர் அவர் அதனுடைய சிறப்புத் தலைவராக ஆனார்.
அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்ட மக்களுடைய வலிமையான குரலாக மக்களாட்சி இயக்கத்தைக் கட்ட வேண்டுமென்பது அவருடைய பிந்தைய ஆண்டு செயல்பாடுகளின் மைய நோக்கமாக இருந்தது. மக்களாட்சி இயக்கத்திற்கு பெண்களும், இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர் என்பது அவருக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. 2009-இல் மக்களாட்சி இயக்கத்தின் 5-ஆவது கருத்தரங்கில் அவருடைய இந்தக் கருத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. "இத்தனை இளைஞர்களை இந்தக் கருத்தரங்கில் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்றைய விவாதங்கள், பாரதியாரின் ‘செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற ஒரு பாடலை நினைவூட்டுகின்றன. நம்முடைய நேற்றைய விவாதங்கள் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பிரதிபலிக்கும் ஒரு சிறு இந்தியாவே இங்கு கூடியிருக்கிறது. இந்தியாவின் எதிர்காலம் நம் கைகளில் இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த சிந்தனை என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. அறிக்கைகளையும், பலருடைய கருத்துக்களையும் கேட்கையில் நாம் எவ்வளவு ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த மாபெரும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை நம்மிடையே உள்ள ஒற்றுமை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் நாம் மக்களாட்சி இயக்கத்தின் ஒரு அமைப்பைக் கட்ட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சிந்தனையோடு நாம் இந்த கருத்தரங்கிலிருந்து செல்ல வேண்டும். நம்முடைய எதிர்காலம் நம்முடைய கைகளில் இருக்க வேண்டும். அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை!"

இந்தியாவில் ஆழமான அரசியல் சீர்திருத்தங்கள் தேவையென்ற அவருடைய தீரமான கருத்து, இன்றைய அரசியல் செயல் வீரர்களிடையே மிகுந்த ஆதரவு பெற்று வருகிறது. தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி சிந்தனையைத் தூண்டும் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் – "பாராளுமன்ற சனநாயக அமைப்பே மிகச் சிறந்ததென்று தற்போது நிலவிவரும் எண்ணத்தை தீவிரமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். கட்சி அமைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆளுமையானது, இறுதியில் பிரதமர் அல்லது முதலமைச்சரை தலைவராகக் கொண்ட ஒரு சிலருடைய அமைச்சரவையின் ஆட்சியாக இருக்கிறது. மதிப்புக்குரிய இவர்கள் சட்ட அல்லது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணியினுடைய தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான ஆட்சிமுறையில் கடந்த ஐம்பது ஆண்டு அனுபவம், இந்த பிரச்சனையை முழுவதுமாக ஆராயுமாறு மக்களாட்சி இயக்கத்தை கட்டாயப்படுத்தியது. எல்லா அதிகாரமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டுமானால், அரசியல் கட்சிகள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவோ பயன்படுத்தவோ கூடாது என்ற கருத்துக்கு அது வந்தது. அரசியல் கட்சிகளுடைய பங்கு, அரசியல் வழிமுறை குறித்தும், அரசியல் பற்றி அவர்களுடைய நம்பிக்கைகளையும் மக்களுக்கு அறிவூட்டுவதாக மட்டும் இருக்க வேண்டும். அவர்களுடைய பங்கு, நம் நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வதற்கு அவர்களைத் தயாரிப்பதாக இருக்க வேண்டும். மேற்கண்ட கருத்தின் அடிப்படையில், ஒரு தொகுதியின் மக்கள் தேர்தலில் யார் நிற்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் செயல்பாடு மன்றத்திலும், வெளியிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராகவோ அல்லது போதுமானதாக இல்லாமலோ இருந்தால் அவரை திரும்ப அழைக்கவும் உரிமை மக்களுக்கு இருந்தால் மட்டுமே உண்மையான அதிகாரத்தை மக்களால் செயல்படுத்த முடியுமென மக்களாட்சி இயக்கம் நம்புகிறது. மேலும், நாட்டிற்கு எந்த வகையான சட்டங்கள் தேவை என்பதை நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதால், அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக புதிய சட்டங்களை உருவாக்கவும் மாற்றவும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்".

1998-இல் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றிய ஒரு குழு திரு. இந்திர ஜித் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த போது, அவருக்கு திரு சங்கரன் எழுதிய ஒரு திட்டவட்டமான கடிதத்தில், "வளர்ச்சியின் கீழ் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மேற்கித்திய உலகம் முன்வைக்கும் சர்வ நிவாரணியானது, சந்தையை ஒட்டியப் பொருளாதாரமும், பல கட்சி சனநாயகமும் ஆகும். நாம் ஒரு சனநாயக குடியரசென்றும், இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற சோசலிசமென கூறிக் கொள்கிறோம். இங்கு அரசியல் கட்சிகளின் எண்ணிக்கைக்குக் குறைவில்லை. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இடம் பிடிக்கவும், இதற்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்கத் தயாராகவும் இருக்கும் அரசியல் கட்சிகள் நமது நாட்டில் இருக்கும் வரை, ஆட்சி அமைப்பானது முழு செயலாக்க அதிகாரத்தையும் பிரதமருடைய கைகளில் (அவர் விரும்பும் போது அவருடைய அமைச்சரவையின் கைகளில்) வைக்கும் அமைப்பாக இருக்கும் வரையிலும், இந்த ஆட்சி அமைப்பு உண்மையில் சனநாயக அமைப்பாக இருக்க எந்த வாய்ப்பும் இல்லை" என்று எழுதியிருந்தார்.

தொழிலாளர்களுடைய வேலை நிலைமைகள் குறித்தும், உரிமைகளைப் பற்றியும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்திய அரசாங்கத்தின் திட்டக் குழு ஏற்படுத்திய சமூக பாதுகாப்பு குறித்த குழுவில் அவர் ஒரு உறுப்பினராக இருந்தார். நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரோடு இணைந்து அவர்கள் கொண்டுவந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சட்டம் கட்டுமானத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்கு வழி வகுத்தது. தொழிற் சட்டத்திற்கு வெளியே பிற துறைத் தொழிலாளர்களின் எதிர்கால சட்டங்களுக்கு இந்தச் சட்டம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 1993-இல் நடைபெற்ற தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் 4-ஆவது ஆண்டு பேரவையின் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவர், காங்கிரசு அரசாங்கத்தின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வருகின்ற ஆண்டுகளில் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை மோசமாக சீரழிக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்தார்.
திரு.சங்கரன் அவர்களுடைய மறைவு, நமது அமைப்பினுடைய வேலையில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. அவருடைய அறிவும், முதிர்ச்சியும், தகுதியும், ஆர்வமும் நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்த பணியாகிய இந்திய மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு வரும் கடமையை நிறைவேற்ற புதிய ஐக்கியத்தோடும், சக்தியோடும் வேலை செய்வதென மக்களாட்சி இயக்கத்தினுடைய அனைத்திந்திய குழு உறுதி மேற்கொள்கிறது.

இந்த உறுதியோடு மறைந்த இந்த தலைவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
 

By admin