பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது!
நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சுற்றுப்புறங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், குழுக்களைக் கட்டுவோம்!
கடந்த நான்கைந்து நாட்களாக மிகவும் அமைதியான முறையில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டுவந்த இலட்சக்கணக்கானவர்கள் மீது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நாம் கண்டிக்க வேண்டும். ஒரு இளம் பெண் குற்றவியலான முறையில் தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த தங்கள் வீடுகளை விட்டு கோபத்தோடு வெளியே வந்த இளம் ஆண்-பெண் எதிர்ப்பாளர்கள், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு அரசின் பதிலாக தாக்குதல்களை மட்டுமே சந்தித்துள்ளனர். அவர்கள் காவல்துறையின் தண்ணீர் பீரங்கிகளையும், தடியடிகளையும் தான் எதிர்கொள்ள நேர்ந்தது.
அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குக்கூட ஆளும் மேட்டுக்குடியினர் அனுமதிக்க விரும்பவில்லை. அமைதியான முறையில் எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இழுக்கை உண்டாக்குவதற்காக சமூக விரோத சக்திகளை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவர்கள் குண்டர்களாகவும், வன்முறையாகவும் செயல்பட்டு, ஆர்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். போராட்டக்காரர்களை அவரவர் வீடுகளுக்கு "அமைதியாகத் திரும்புமாறு" ஊடகங்கள் இப்போது வேண்டுகோளை எழுப்பி வருகின்றன. இந்த சமூக விரோத சக்திகள், அதிகாரத்திலுள்ளவர்களுடைய கையாட்களாகும். இப்படிப்பட்ட குற்றவியலான குண்டர்களை அவர்கள் தான், ஒரு கலவரத்தை அல்லது வகுப்புவாத படுகொலைகளை நடத்துவதற்கோ, பெண்களைத் தாக்குவதற்கோ அல்லது சமுதாயத்திலுள்ள அநீதிக்கு எதிராக குரலெழுப்பும் எந்தஒரு பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுப்பதற்கோ பயன்படுத்துகிறார்கள்.
இந்தக் கொடூரமான கூட்டுக் கற்பழிப்பை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென நாம் கோருகிறோம். இந்தக் குற்றத்திற்கும், பெண்களுக்கு எதிரான பதிவு கூட செய்யப்படாத எண்ணெற்ற பிற குற்றங்களுக்கும் மத்தியிலும், தில்லியிலும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களும், காவல்துறையும், "நீதி அமைப்பும்" பொறுப்பாளிகள் ஆவர். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அநீதிக்கு எதிராக கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும், நகரின் ஒரு மருத்துவமனையில் தன்னுடைய உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண், ஒரு சக்தி வாய்ந்த சின்னமாக ஆகி இருக்கிறார். தில்லியிலும், பிற நகரங்களிலும் வீதிகளில் ஆயிரக்கணக்கில் குவிந்து கொண்டிருப்பவர்கள், இந்த அமைப்பு எந்த விலை கொடுத்தாகிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டுமெனக் கோருகின்றனர்.
இன்றுள்ள நிலைமைகளுக்கு யார் காரணம்? பெண்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களைத் தாக்குகின்ற குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் பல்வேறு சட்டங்களுக்கு குறைவில்லை. ஆனால் நமது நாட்டை ஆளுகின்ற அரசியல் குண்டர்கள் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. பெண்களுக்கு எதிரான மிகவும் கொடூரமான குற்றங்களை இழைப்பதில் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வுமே முக்கிய குற்றவாளிகளாக இருக்கிறார்கள். இந்தக் கட்சிகளுடைய பல தலைவர்கள் மேலும் கற்பழிப்பு மற்றும் பெண்களைக் கடத்துதல் வழக்குகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளுடைய தலைவர்கள் தான் கொலைகார குண்டர்களை ஏவி விட்டு, தில்லியில் 1984-இல் நடைபெற்ற சீக்கிய மக்கள் படுகொலைகளையும், 1992-இல் பாபரி மசூதி உடைத்து நொறுக்கியும், அதைத் தொடர்ந்து மும்பை, சூரத் மற்றும் பிற நகரங்களில் முஸ்லீம் மக்கள் மீது கொலைகாரத் தாக்குதல்களை நடத்தியும், 2002-இல் குஜராத்தில் முஸ்லீம்களைப் படுகொலை செய்தும் இருக்கின்றர். இந்த வன்முறைகளில் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், கர்ப்பிணிப் பெண்களுடைய சிசுவை அழிப்பதற்காக அவர்களுடைய வயிறுகள் வெட்டி திறக்கப்பட்டன. அதிகாரத்திலிருக்கும் இந்தக் குற்றவாளிகள் தான், காஷ்மீரிலும், வடகிழக்கிலும், பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பிற மாநிலங்களில் இராணுவம் பெண்களை அவமதிக்க அனுமதிக்கின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள், நீதி மன்றங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பும் ஆதரவுமின்றி, இப்படிப்பட்ட படுகொலைகளும், குற்றங்களும் நடந்திருக்கவே முடியாது. எனவே எந்த முகத்தோடு அவர்கள் மக்கள் முன் வந்து, பெண்களுடைய பாதுகாப்பைத் தங்களுடைய கைகளில் விட்டு விடுமாறு மீண்டும் ஒருமுறை பொய் சொல்ல முடியும்?
நீதியையும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் நாம் கோருகின்ற அதே நேரத்தில், நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்ற காவல் துறையையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் நாம் நம்பியிருக்க முடியாது. எனவே, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள கட்சி, சாதி, மதம், பால் ஆகிய வேறுபாடுகளைக் கடந்த அளவில் நம்முடைய சுற்றுப்புறங்களில் குழுக்களைக் கட்ட வேண்டும். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு சமுதாயத்திற்காகவும் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக போராட்டத்தை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மக்களாட்சி இயக்கம், இந்திய இளைஞர் குழு மற்றும் முற்போக்கு பெண்கள் சங்கம்
டிசம்பர், 23, 2012. தொலை பேசி – 75980 69667 www.lokraj.org.in