பெறுநர்
இந்தியப் பிரதமர்
டாக்டர் மன்மோகன் சிங்
7, ரேசுகோர்சு சாலை
புது தில்லி

ஐயா,

பொருள் – நவம்பர் 1984 படுகொலைகள். வகுப்புவாத வன்முறையைத் தடுக்கவும், ஒரு பாதுகாப்பான
எதிர்காலத்தை உறுதி செய்யவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

1984-இல் நடைபெற்ற சீக்கிய மக்கள் படுகொலையானது நமது நாட்டினுடைய மதச்சார்பற்ற தன்மை குறித்தும், சனநாயகம் பற்றியும் சட்டத்தின் ஆட்சியைப் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மிகுந்த துயரத்தோடும், கோபத்தோடும், அரசாங்கத்தின் தலைவராகிய உங்களுக்கு நாங்கள் இதை எழுதுகிறோம். 28 ஆண்டுகள் கடந்துங்கூட இந்தப் படுகொலையை நடத்திய முக்கிய குற்றவாளிகளை விசாரித்து செய்த குற்றங்களுக்காக தண்டிப்பது கிடக்கட்டும், அவர்களைக் கண்டுபிடிக்க கூட இல்லை. நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள், குடிமக்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற அவர்களுடைய அரசு தர்மத்தை வெளிப்படையாகவே மீறுகின்ற போது அவர்கள் மீது மக்களாகிய நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கிறதா? நம்மைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அதைச் செய்யாமல் மாறாக படுகொலை செய்பவர்களையம் கற்பழிப்பவர்களையும் பாதுகாக்கும்போது நம்முடைய அரசு அதிகாரிகள் மீது நமக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இருக்கிறதா? நமக்கு நீதியை முறையாகவே மறுத்தும், அதிகாரத்தில் இருக்கின்ற கட்சியினுடைய அரசியல் ஆதாயங்களுக்கு ஏற்றவாறு கையாளப்பட அனுமதித்தும் வருகின்ற நம்முடைய சட்ட மற்றும் நீதித்துறை மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கிறதா?

1984-இல் 7000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்களேயானால், பொருத்தமான படிப்பினைகளை நாம் படித்துக் கொண்டிருந்தோமானால், எங்களுடைய கருத்தில், 2002 குஜராத் வன்முறைகளும் ஒடிசாவில் கிறித்துவர்கள் கொல்லப்பட்டதும், அசாமில் அண்மையில் நடைபெற்ற படுகொலைகளும் நிகழ்ந்திருக்காது. படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களை தண்டிக்கப்படுவதற்கு பதிலாக, அமைச்சரவையில் இடம் கொடுத்து பரிசளிக்கப்பட்டனர். படுகொலைக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட, கடந்த 28 ஆண்டுகளாக நீதியின் பாதையில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வந்த உயர்மட்ட கால்துறை மற்றும் பொது நிர்வாக அதிகாரிகள் பதவி உயர்வுகள் மூலமும், மதிப்புகள் மூலமும் பரிசளிக்கப்பட்டுள்ளனர். 2005-இல் நானாவதி அறிக்கையைப் பார்த்த பின்னர் நீங்கள் அவமானத்தில் தலை குனிந்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வாக்குறுதி கொடுத்தீர்கள். ஏழாண்டுகள் கடந்தும், அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் உங்களைக் கேட்கிறோம் –

1. அப்பாவி குடிமக்களைப் படுகொலைக்கு பொறுப்பான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, காவல்துறையால் மூடப்பட்ட அல்லது தவறான விசாரணையாலோ, விசாரணைக்கு பொருளாதாய சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தாத காரணத்தாலோ குற்றமற்றவரென அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட எல்லா வழக்குகளையும் மீண்டும் திறந்து மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
2. தில்லி காவல்துறைக்கு வெளியிலிருந்து நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு விசாரணைக் குழுவால் இந்த வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைகள் உச்ச நீதி மன்றத்தால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
3. இந்த வழக்குகள், விரைவு நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டும். அவற்றின் முன்னேற்றத்தை ஒரு சிறப்புக் குழுவின் மூலம் உச்ச நீதி மன்றம் கண்காணிக்க வேண்டும்.
4. விசாரணையின் வரம்பானது நவம்பர் 1984-இல் சீக்கியர்கள் கொல்லப்பட்டு, ஆனால் தெரியப்படுத்தப்படாமல் விடப்பட்ட எல்லா மாநிலங்களையும் கொண்டதாக விரிவு படுத்தப்பட வேண்டும்.
5. வகுப்புவாத, குறுங்குழுவாத வன்முறையைக் கையாள ஒரு சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். மனித இன வரலாற்றிலேயே மிகப் பெரிய வகுப்புவாத பேரழிவோடு சேர்ந்து கொடூரமான முறையில் நமது நாடு பிரிக்கப்பட்டு 65 ஆண்டுகளுக்குப் பின்னர், 1984-இல் சீக்கிய மக்கள் படுகொலைக்கு 28 ஆண்டுகளுக்குப் பின்னர், அப்படிப்பட்டதொரு சட்டம் கொண்டுவர வேண்டுமென உங்களுடைய அரசாங்கம் முதலில் ஒப்புக் கொண்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னர், இதற்காக ஒன்றுமே செய்யப்படவில்லை என்பது இப்படிப்பட்ட படுகொலைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் அவற்றிற்கு முடிவுகட்ட வேண்டும் என்பது பற்றி உங்களுடைய அரசாங்கத்திற்கு உள்ள உண்மையான அக்கறை பற்றிய சந்தேகத்தை எழுப்புகிறது.
6. அறிவார்ந்த சட்ட அறிஞர்கள் உட்பட, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்ற போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், வரைவுச் சட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள். "அதிகாரத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் பிரச்சனைக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்ற கொள்கையைச் சட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவர்கள் கோரியிருக்கிறார்கள். அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருப்பவர்கள், குடிமக்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் கடமையிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் வழுவும்போது அவர்களைக் குற்றத்திற்குக் காரணமானவர்களாகவும், குற்றவாளிகளாகவும் கருதப்பட வேண்டும்.

எங்களுடைய கோரிக்கைகள், இந்த நாட்டினுடைய விழிப்புணர்வையும், நீதியை விரும்பும் எல்லா மக்களுடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கின்றன. இந்த நாட்டினுடைய பிரதமராக நீங்கள் உங்களுடைய அரசு தர்மத்தைக் கடைபிடித்து மேற்கூறியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்றும் அதன் மூலம், நவம்பர் 1984 போன்ற நிகழ்வுகள் மீண்டும் எப்போதும் நடைபெறாதெனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

இந்த முறையீட்டில் கையெழுத்திட்டிருப்பவர்களில் சிலர் –
1. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்
2. டி.எஸ். சங்கரன், இ.ஆ.ப. (ஓய்வு)
3. நீதிபதி. ஓஸ்பெட் சுரேஷ்
4. பாலி நாரிமன்
5. நீதிபதி. அஜித் சிங் பெயின்சு
6. தோழர். லால் சிங், பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி
7. குல்திப் நைய்யர்
8. நீதிபதி. இராஜேந்தர் சச்சார்
9. எஸ்.இராகவன், தலைவர், மக்களாட்சி இயக்கம்
10. சாந்தி பூஷன், முன்னாள் சட்ட அமைச்சர்
11. சோனாலி போசு, திரைப்படத் தயாரிப்பாளர்
12. மது கிஷ்வர், மனுஷி
13. பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற முது பெரும் வழக்கறிஞர்
14. டீஸ்டா செடால்வாத், சமூக செயல்வீரர்
15. பேராசிரியர். நந்தினி சுந்தர், சமூகவியல் துறைத் தலைவர், தில்லி பல்கலைக் கழகம்
16. கீதா.ஆர், "அம்மு" திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்
17. சிவானந்த் கண்வி, "கெதர் ஜாரி ஷை" இதழின் ஆசிரியர்
18. இரஜ்விந்தர் சிங் பெயின்சு, முதுபெரும் வழக்கறிஞர், சண்டிகர்
19. சுச்சரித்தா, செயலாளர், புரோகாமி மகிலா சங்கதன்
20. ஏ.மேத்யூ, செயலாளர், காம்கார் ஏக்தா சள்வள், மகாராஷ்டிரம்
21. டாக்டர். சஞ்சீவினி ஜெயின், இணைப் பேராசிரியர், வி.ஜி.வேசு கல்லூரி, மும்பை
22. பேராசிரியர். பி.அனந்தநாராயணன், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
23. பிரகாஷ் ராவ், பேச்சாளர், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி
24. பிர்ஜு நாயக், தில்லி செயலாளர், லோக் ராஜ் சங்கதன்
25. அ.பாஸ்கர், சென்னை செயலாளர் – மக்களாட்சி இயக்கம்
26. இ.சரவணமுத்துவேல், தூத்துக்குடி மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்
26. டி.வில்சன், தலைவர் – இரப்பர் தோட்டத் தொழிலாளர் சங்கம், கன்னியாகுமரி

By admin