அன்புடையீர்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்த வேண்டுமென போராடிவரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தமிழக மக்கள் மீது, தமிழக அரசும் மத்திய அரசும் காட்டுமிராண்டித்தனமான பாசிச வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். போராடுகின்ற மக்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான காவல்படையினர் குவிக்கப்பட்டு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, புகைக் குண்டு வீச்சு, தடியடி, ஊரடங்குச் சட்டமென அரசிடம் உள்ள அனைத்து வகையான பாசிச இயந்திரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலும் வன்முறையிலும் மீனவர் உட்பட பலர் இறந்தும் கடுமையாக காயமடைந்தும் உள்ளனர். கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமேசுவரம், கோவை, சென்னை மற்றும் தமிழ்நாடெங்கிலும் மீனவ மக்களும் பிறரும் வேலை நிறுத்தத்திலும், பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இருட்டடைப்பு செய்யும் வகையில் காவல் துறையினர் செய்தியாளர்களையும் தாக்கி வருகின்றனர். தமிழகமெங்கும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் அரசு நடத்திவரும் இந்த வன்முறை தாக்குதல்களால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். அரசின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக தமிழ்நாடெங்கிலும் உள்ள மாணவர்களும், வழக்கறிஞர்களும், பொது மக்களும், பல்வேறு கட்சிகளும், மக்கள் அமைப்புக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மையான மக்களுடைய கோரிக்கைகளைப் புறக்கணித்து, அணுஉலையைத் திறப்பதற்காக மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான பாசிச தாக்குதல்களைத் தொடுத்திருக்கும் அதிமுக, காங்கிரசு அரசாங்கங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அணுஉலைக்கு அருகில் வாழும் மக்கள் தங்கள் பாதுகாப்பு பற்றிய அச்சம், வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி பற்றிய பயம், சுற்றுப்புற சூழல் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அங்கு அணுஉலை துவக்கப்படுவதை பல்லாண்டுகளாக எதிர்த்து வருகிறார்கள். ஆனால், மத்திய மாநில அரசுகள் இந்த மக்களின் உண்மையான துயரங்களைத் தீர்க்க முற்படாமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருந்துவிட்டு இரக்கமில்லாமல் எதிர்ப்புக் குரல்களை நசுக்க பாதுகாப்பு படைகளை ஏவிவிட்டுள்ளனர். நீதி மன்றமும் மக்களுடைய நியாயமான முறையீடுகளை கேட்க மறுத்து அணுஉலையைத் துவக்கலாமென தீர்ப்பளித்துள்ளது.
கூடங்குளம் சுற்று வட்டாரத்தில் அணுஉலைத் திட்டம் பற்றி மக்களுடைய கருத்துக்கள் இதுவரை கேட்கப்படவில்லை, அணு விபத்துக்களைப் பற்றி மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அணுஉலை பற்றியும் அதன் கழிவுகளைப் பற்றியும் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்பட வில்லை. 1984-ல் நடந்த போபால் நச்சு வாயு சம்பவத்தில், இது வரை 10,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5,50,000 மக்கள் நோய்வாய்பட்டுள்ளனர். இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு கொடுக்கப்படவில்லை. பேரழிவுக்கு முழு பொறுப்பாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவனை, மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு தண்டனையில்லாமல் நாட்டை விட்டு வெளியேற உதவினர்! ஒவ்வொரு பேரழிவிலும் அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் மக்களுக்கு அதே கசப்பான அனுபவமே ஏற்பட்டுள்ளது. உண்மைகள் இவ்வாறு இருக்க, எல்லா நலன்களையும் பாதுகாக்கும் விதமாக அணுஉலை கட்டப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்களை கூடங்குளம் மக்களாலோ மற்றவர்களாலோ எப்படி நம்ப முடியும்?
அணுஉலை கட்டப்படுவதை எதிர்த்தும் மற்ற பெரிய திட்டங்களை எதிர்த்தும் கர்நாடகாவின் கைய்காவிலும், மராட்டியத்தின் ஜெய்தாபூரிலும், அரியானாவின் கோரக்பூரிலும், ஒடிசாவில் போஸ்கோவை எதிர்த்தும் வேறு பல இடங்களிலும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் பல பகுதிகளில், அணுஉலைகள், கட்டுமான திட்டங்கள், எஃகு ஆலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல், அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. "பொது நோக்கம்" என்ற பெயரில் தங்களுடைய நிலங்களிலிருந்து மக்கள் வன்முறையால் விரட்டியடிக்கப்படுகிறார்கள். முன்னேற்றம் மக்களுக்காக இருக்க வேண்டுமேயன்றி, பெரும் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக மக்களைக் காவு கொடுப்பதாக இருக்கக் கூடாதெனவும், தீர்மானிக்கும் உரிமை தங்கள் கைகளில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் போராடி வருகின்றனர்.
தமிழக அரசு கூடங்குளம், இடிந்தகரை மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் போராடும் மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதையும், துப்பாக்கிச்சூடு நடத்துவதையும், மக்களைக் கொல்வதையும், மக்களுடைய சனநாயக உரிமைகளைப் பறித்து ஊரடங்குச் சட்டத்தை அறிவித்திருப்பதை யும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும், துணை இராணுவ படைகளையும் அங்கு நிறுத்தியிருப்பதை யும், போராட்டத் தலைவர்களையும், ஆயிரக்கணக்கான மக்களையும், சிறையில் அடைத்திருப்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கொடிய நடவடிக்கைகள், அணுஉலையைத் திறக்கும் அரசாங்கத்தின் முடிவைப் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகின்றன. பஞ்சாயத்து ராஜ் என்பதும் மக்களுக்கு அதிகாரம் என்பதும், சனநாயகம் என்பதும் பச்சை பொய் என்பதை இந்திய அரசின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. இந்தியாவில் உண்மையில் மக்களாட்சி இருக்குமானால், வன்முறையைக் கையாள்வதற்கு பதிலாக, பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கிணங்கி கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூடிவிட்டு மக்களைப் பாதிக்காத பிற திட்டங்களை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.
நமது நாட்டிலே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்க மட்டுமே மக்களுக்கு உரிமை இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உண்மையில் நாட்டை ஆள்வது பண முதலைகளும், ஏகபோகக் குடும்பங்களும் தான். அவர்களுக்கு சேவை செய்யும் காங்கிரசு, பாஜக, அதிமுக, திமுக போன்ற கட்சிகள், மக்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதற்கு கொஞ்சமும் தயங்குவதேயில்லை. இந்தியாவிலுள்ள பாராளுமன்ற சனநாயக அமைப்பு எந்த வகையிலும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பதை கூடங்குளம் பிரச்சனையில் அரசின் நடைமுறையும் தெளிவுபடுத்துகிறது. ஆட்சி மன்றமும், அரசியல் வழிமுறையும், நீதி மன்றமும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதாகவும், மக்களுக்கு அடிபணிந்ததாகவும் இருக்க வேண்டுமே ஒழிய மக்களை அடிமைப் படுத்துவதாக இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட அமைப்பை மாற்றாமல், ஆட்சி செய்கின்ற கட்சிகளை மட்டும் மாற்றி எவ்விதப் பயனும் இல்லை. மக்களை மையமாக வைத்து ஒரு புதிய அரசில் அமைப்பை நாம் உருவாக்குவது உடனடித் தேவையாகும். அப்படிப்பட்டதொரு அமைப்பு மட்டுமே இந்திய மக்களுடைய எல்லாத் தேவைகளை நிறைவேற்றவும், வளமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் அளிக்கவும் முடியும்.
- போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கொல்லும் அரசாங்கத்தைக் கண்டிப்போம்!
- காட்டுமிராண்டித்தனமான ஊரடங்குச் சட்டத்தையும், காவல்துறையினரையும் திரும்பப் பெறு!
- கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்புப் போராளிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்!
- அரசின் பாசிச தாக்குதல்களை வன்மையாக கண்டிப்போம்!
- சட்டங்களையும் திட்டங்களையும் மக்களே தீர்மானிப்போம்!
மக்களாட்சி இயக்கம், Lokraj Sangathan, கைபேசி – 7598069667,இணையம் www.lokraj.org.in, மின்அஞ்சல் Makkalatchi.tn@gmail.com