மக்களுடைய எதிர்காலத்தையும், சுற்றுப்புற சூழலையும் அச்சுறுத்தும்
கூடங்குளம் அணுமின் திட்டத்தை உடனடியாக மூடு!
அன்புடையீர்,
தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கோரி கடந்த சில மாதங்களாகப் பல்வேறு வழிகளிலும் தீவிரமாகப் போராடிவருகிறார்கள். அணுஉலை தொழில் நுட்பம் பாதுகாப்பற்றது, பேரழிவை உருவாக்கக் கூடியது என்பது மட்டுமின்றி, அது சுற்றுவட்டாரத்தில் புற்றுநோய் மற்றும் பல கொடிய நோய்களை உருவாக்கும் என்பதாலும், மீன், தண்ணீர் போன்ற தங்களுடைய வாழ்வாதாரங்களையும், சுற்றுப்புற சூழலையையும் கடுமையாக பாதிக்கும் என்பதாலும் அவர்கள் இதை எதிர்த்து வருகிறார்கள். நம்முடைய மின்சக்தித் தேவைகளை சூரிய ஒளி, காற்றாலை, கடலலை போன்ற சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத, பாதுகாப்பான மரபுசாரா எரிசக்தி மூலமும் நிறைவு செய்ய வேண்டும் என்கின்றனர்.
துவக்கத்திலிருந்தே இந்த அணுஉலைகளை தடுத்து நிறுத்தப் போராடிவந்துள்ள மக்கள் இப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கூடங்குளத்தில் ஒரு பேராபத்து நிகழுமானால், அது அந்தச் சுற்று வட்டாரத்தை மட்டுமின்றி முழு தமிழகத்தையும், கேரளாவையும், தென்னிந்தியாவையே பாதிக்கும். இந்தப் போராட்டத்திற்கு முழுஆதரவு தெரிவித்து, தமிழ்நாடெங்கிலும், கேரளாவிலும் ஆர்பாட்டங்களும், பேரணி களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்திய முதலாளிகளுடைய கூட்டமைப்பாகிய அசோசெம் (ASSOCHAM), மக்களுடைய பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல், தங்களுடைய தொழிற்சாலை களுடைய வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரம் பெற அரசாங்கம் அணுமின் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டிருக்கிறது. எத்தனை இலட்சம் மக்கள் இறந்தாலென்ன, நாங்கள் மேலும் கொழுக்க மின்சாரம் தேவை என்கின்றனர் அவர்கள். இவர்களுடைய மின்சாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, மக்களுடைய நியாயமான எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் அணுஉலைகளைக் கட்டி வந்திருக்கின்றனர். தற்போதைய அணுசக்தி தொழில் நுட்பமானது, மிகவும் சிக்கலானதும், மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்ததாகும். எந்த ஒரு இயற்கையிடரும், சிறு விபத்தும், கவனக்குறைவும் கூட, ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கக் கூடியதாகும். செர்னேபில்லிலும் அண்மையில் சப்பானில் புகுசீமாவிலும் நடைபெற்ற அணுஉலை விபத்துக்கள், நம்நாட்டிலும் அணுஉலைகள் இலட்சக்கணக்கான மக்களை கொல்லக்கூடிய அபாயத்தைத் தெளிவாக்கியுள்ளன.
கூடங்குளம் அணுஉலைகள் தேவையான பாதுகாப்புடன் கட்டப்பட்டிருப்பதாகவும் எனவே எவ்வித விபத்துக்களும் நிகழாதென அணு சக்தி நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுனர்களும், அரசு அதிகாரிகளும் கூறி வருகின்றனர். செர்னோபில்லிலும், புகுசீமாவிலும் கூட அணுஉலைகள் இப்படிப்பட்ட பாதுகாப்புடனே கட்டப்பட்டிருந்தன, இருந்தும்கூட மிகக் கொடூரமான பேரழிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன. மேலும், அணு உலைக் கழிவுகள் மிகவும் மோசமான கதிர்வீச்சை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெளிப் படுத்தி சுற்றுப்புற சூழலை பாதித்துக் கொண்டே இருக்கும். சப்பான், புகுசீமா பேரழிவை நிர்வகித்த முறையை ஒப்பிட்ட அணுசக்தி முறைப்படுத்தும் வாரியத்தின் (AREB) முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், இந்தியாவில் இப்படிப்பட்ட விபத்துக்களைக் கையாள நாம் தயாரிப்பு இல்லாதவர் களாகவும் திட்டமில்லாதவர்களாகவும் இருப்பதாகக் கூறியுள்ளார். பேரழிவைத் தவிர்பதற்கான மேலாண்மை திட்டமானது, காகிதத்தில் மட்டுமே உள்ளதாகவும், ஒத்திகைகள் பெயருக்காக நடத்தப்படுபவைகளே அன்றி எந்த விபத்தையும் உண்மையில் சமாளிக்கக் கூடியவையல்ல என்றும் அவர் உறுதிபட கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அவரும், இந்திய அறிவியல் கழகத்தின் தலைவர் டாக்டர். பி.பலராமும், பிற வல்லுனர்களும் அண்மையில் பிரதமருக்கு அனுப்பியுள்ள வெளிப்படையான கடிதத்தில் நிகழக்கூடிய விபத்துக்களின் தாக்கத்தை இந்திய அணுசக்தித் துறை, அலட்சியமாக குறைத்து மதிப்பிடுவதாகக் கூறி, அரசாங்கம் தன்னுடைய அணுசக்திக் கொள்கையை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டுமெனவும், அது வரை எல்லா அணுசக்தி செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் திட்டவட்டமாகக் கேட்டிருக்கின்றனர். புகுசீமா பேரழிவுக்குப் பின்னர், செர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர் லாந்து, இத்தாலி, மெக்சிகோ, பிரான்சு ஆகிய நாடுகள்கூட தங்களுடைய அணுசக்தித் திட்டங்களுக்கு முடிவு கட்ட தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.
எனவே அணுஉலையை மூட வேண்டுமென்ற தமிழக மக்களுடைய கோரிக்கை மிகவும் நியாயமானதாகவும், தொலைநோக்கு கொண்டதாகவும் இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான மக்களுடைய இந்த நியாய மான கோரிக்கையை இத்தனை ஆண்டுகள் புறக்கணித்துவந்த அரசாங்கம் இப்போதாவது விழித்தெழுந்து உடனடியாக இதை நிறுத்த வேண்டும். மாறாக, மக்களுடைய அச்சங்களைப் போக்குவது என்ற பெயரில் மக்களைத் திசை திருப்புவதிலும், போராடுபவர்களை அச்சுறுத்துவதிலும், பொய் வழக்குகளைப் போடுவதிலும் அரசாங்கமும், காங்கிரசு, அதிமுக, திமுக போன்ற கட்சிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.
போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே இரவில் கொன்ற யூனியன் கார்பைடு கம்பெனியின் விபத்து நடக்க அனுமதித்து, அதன் தலைவன் வாரன் ஆண்டர்சனை மக்களிடமிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தது மட்டுமின்றி 27 ஆண்டுகள் கடந்துங்கூட இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமோ, மருத்துவ வசதிகளோ பெற்றுத் தராத காங்கிரசு, பாஜக கட்சிகள் இப்போது கூடங்குளம் எவ்வளவு பாதுகாப்பானது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்! ஏற்கெனவே அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்ற கல்பாக்கம், தாராப்பூர் போன்ற இடங்களில் வசிக்கின்ற மக்கள் கதிர் வீச்சின் காரணமாக புற்றுநோய், தைராய்டு போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு மடிந்து வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ வசதிகள் எதையும் அரசாங்கம் செய்து தரவில்லை. இவர்கள் கூடங்குளம் பற்றிக் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நாம் நம்பமுடிமா?
இந்தப் போராட்டத்தில் "அந்நிய நாட்டு" சக்திகளின் கை இருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும், கிருத்துவ பாதரியார்களால் தூண்டிவிடப்பட்டு வருவதாகவும் பொய்யான பழிகளைக் கூறி ஒடுக்க முயற்சிக்கிறார்கள். நம்முடைய மின்சாரத் தேவையை நிறைவேற்றுவதாகக் கூறி, இந்திய முதலாளி களும், அமெரிக்க, ஐரோப்பிய அணுஉலை உற்பத்தி நிறுவனங்களும் கொள்ளை இலாபமடிப்பதற்காக நம் நாட்டில் பேராபத்து நிறைந்த தொழில் நுட்பத்தைத் திணித்தும், விபத்துக்களுக்கு அந்நிய நிறுவனங்கள் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மிகக் குறைவாக வரையறுத்தும் ஏஜண்டுகளாக செயல்படும் காங்கிரசும், பாஜகவும், பாதுகாப்பிற்காகப் போராடும் மக்களை அந்நிய நாட்டு ஏஜண்டுகளென உண்மையை தலைகீழாக்கி இழிவுபடுத்துகிறார்கள். போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி இனக்கலவரமாக்கவும் முயற்சிக் கிறார்கள். அணுஉலையை மூடவேண்டுமென கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த எல்லா பஞ்சாயத்துக்களும் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானங்களையும் இந்த "சனநாயகவாதிகள்" காலில்போட்டு நசுக்கி வருகிறார்கள்.
இந்த மக்கள்விரோத சக்திகளை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும். நம் எதிர்காலத்தை இருண்டதாக்க முயற்சிக்கும் அரசாங்கத்தையும், காங்கிரசு, பாஜக, அதிமுக, திமுக கட்சிகளுடைய சதித் திட்டங்களையும் புரிந்து கொண்டு அணுஉலைகளை இழுத்து மூடும் வரை விட்டுக் கொடுக்காமல் நாம் போராட வேண்டும். நாட்டினுடைய எரிசக்திக் கொள்கையை மக்களோடு கலந்தாலோசித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். அது வரை எல்லா அணுசக்தித் திட்டங்களையும் உடனடியாக நிறுத்தி வைக்கவேண்டும். கூடங்குளம் அணுஉலை பற்றி சுற்றியுள்ள வட்டார மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் அணுஉலையை முடிவு செய்ய வேண்டும் என்று கோரி நம்முடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.
- திட்டங்களைத் தீர்மானிப்பது யார் – மக்களா, முதலாளிகளா?
- கூடங்குளம் அணுமின் திட்டத்தை உடனடியாக மூடு!
- நாட்டின் எரிசக்திக் கொள்கையை மக்களோடு கலந்தாலோசித்து முடிவு செய்!
மக்களாட்சி இயக்கம்
கைபேசி – 7598069667, இணையம் www.lokraj.org.in மின்அஞ்சல் Makkalatchi.tn@gmail.com