அணுசக்திக்கு எதிரான கலந்தாலோசனைக் கூட்டம்

அன்புடையீர்,
வணக்கம். அணுசக்தி பாதுகாப்பற்றது, ஆபத்தானது என்பதை உலகின் பல்வேறு விபத்துக்களும் நிகழ்வுகளும் உறுதிப்படுத்தி வருகின்றன. இதனடிப்படையில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளும் இதனைக் கைவிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. நமது நாட்டிலும் மேற்கு வங்கம் அரிப்பூர் அணுமின் திட்டத்தை ரத்து செய்துவிட்டு வங்க மாநிலம் எங்குமே அணுசக்தித் திட்டங்கள் எதுவும் தேவையில்லையென அறிவித்திருக்கிறார்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவும் அணுமின் திட்டம் எதுவும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறது.
ஆனால் தமிழகத்திலோ இந்தியாவிலேயே பெரிய 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அணுஉலைகளைக் கொண்ட "பூங்கா" ஒன்றினைக் கூடங்குளத்திலும், உலகின் எந்த நாட்டிலும் இயக்கப்படாத அதிவேக ஈணுலைகளை கல்பாக்கத்திலும், தேவையற்ற நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்டம் தேவாரத்திலும் துவக்குகிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இவற்றைக் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

மேற்கண்ட அழிவுத் திட்டங்களைப் பற்றி தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும், அவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவும், அணுவாயுதங்களையும், அணுசக்தி நிலையங்களையும் தமிழகத்திலிருந்து விரட்டிடவும், எதிர்காலச் சந்ததிகளுக்கு அணுசக்தியற்ற தமிழகத்தை உருவாக்கிடவும், மரபுசாரா எரிசக்திகளைக் கண்டுணர்ந்து தமிழ் மண்ணின் பசுமை வளங்களைப் பாதுகாத்திடவும், தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை நிலைநிறுத்திடவும், நாமெல்லாம் ஒன்றுகூடி ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

வரும் செப்டெம்பர் 25, 2011 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மதுரை சோகோ அறக்கட்டளை அரங்கில் (143, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை 625020, தொலை பேசி 0452-583962) கூடி விவாதிக்க இருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் தாங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம். மக்கள் நலம் விரும்பும் பிற செயல்பாட்டாளர்களுக்கும் நம் அழைப்பினைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.
தங்களுடைய மேலான வருகையை எதிர்நோக்குகிறோம்.
நன்றி

.
அணுசக்திக்கு எதிரான மக்களாட்சி இயக்கம் பூவுலகின் நண்பர்கள்
மக்கள் இயக்கம் கைபேசி 07598069667 கைபேசி 8925853173
கைபேசி 9865683735

By admin