ஏர் இந்தியா – இந்தியன் ஏர்லயன்சின் தாற்காலிகத் தொழிலாளர்கள் ஐக்கியம்
தற்போதுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் தாற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்யும் முன்னாள் இந்தியன் ஏர்லயன்சின் தாற்காலிகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தங்களுக்காக போராடக்கூடிய சங்கத்தை அமைப்பதென முடிவெடுத்தனர். ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தாற்காலிகத் தொழிலாளிகளாகப் பல்லாண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். நான்காவது படிநிலை (கிளாசு 4) பணியாளர்களான இவர்கள் உதவியாளர்களாகவும், ஊர்தி ஓட்டுனர்களாகவும் விமான சேவைகளுக்கு மிகவும் பயனுள்ள பல வேலைகளை மற்ற தொழிலாளிகளோடு சேர்ந்து செய்து வருகின்றனர். உதவியாளர்கள் இஞ்சினிரிங் பராமரிப்பு, கிரவுண்டு சப்போர்ட், சுங்கவரி, பிற அலுவலகங்கள் போன்ற துறைப் பணிகளில் உதவுவது, பயணிகளுடைய சுமைகளை விமானத்தில் ஏற்றுவது, அடுக்குவது, இறக்குவது, சரக்குகளை ஏற்றி, இறக்குவது, விமானத்தைத் தூய்மைப்படுத்துவது, மற்றும் பல முக்கிய பணிகளில் உதவுவது போன்ற பல்வேறு பணிகளையும் இரவு பகலாக ஷிப்டுகளில் செய்து வருகிறார்கள். ஓட்டுனர்களாக வேலை செய்பவர்கள், பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை முறையாகவும், மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் விமான ஒடுதளத்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி ஓட்டிச் செல்லும் முக்கிய பணியை ஆற்றி வருகிறார்கள். சமீபகாலம் வரை இவர்கள் நேரம் தவறாமல், விமானஓட்டிகளையும், விமானப் பணியாளர்களையும் (கேபின் கிரூ) பிற முக்கிய பணியாளர்களையும் நகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் தங்குமிடங்களிலிருந்து பணியிடங்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய பணிகள் பல்வேறு விதிமுறைகளையும், பாதுகாப்பு விதிமுறைகளையும் கண்ணும் கருத்துமாக பின்பற்றி விமானங்களும் அவற்றின் பயணங்களும் பாதுகாப்பு நிறைந்ததாகவும், வசதியானதாகவும், நேரந்தவராமல் செயல்படுவதாகவும் பொறுப்புடன் பணியாற்றுகின்றனர். நிர்வாகம் இவர்களை ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சின் பணிகளுக்கு மட்டுமின்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரசு, எமிரெட்ஸ், லுப்தான்சா கார்கோ என வேறு பல தனியார் விமான நிறுவனங்களின் வேலைகளுக்கும் கூட பயன்படுத்துகிறார்கள்.
இப்படி மிகவும் பொறுப்புடன் கொடுக்கப்பட்ட கடமைகளை ஆற்றுகின்ற இந்தத் தொழிலாளிகளை 20 – 30 ஆண்டுகளாக தாற்காலிகத் தொழிலாளிகளாக ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சு நிர்வாகம் வைத்திருக்கிறது. இவர்களில் பலர் 25-30 ஆண்டுகளுக்கும் மேல் தாற்காலிக தொழிலாளிகளாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களை நிரந்தரப்படுத்துவதைத் தவிற்பதற்காக அவர்களுக்கு ஆண்டிற்கு 6 மாதங்களுக்கு மேல் வேலை கொடுப்பதில்லை. 180 நாட்கள் வேலை செய்தவர்களை கட்டாய இடைவெளி (பிரேக்) கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்தத் தாற்காலிக தொழிலாளிகளுக்கு மிகக் குறைவான அடிப்படை தினக்கூலியைத் தவிற பஞ்சப்படி, இதர படிகளென வேறெந்த பணப் பயன்களும் கொடுக்கப்படுவதில்லை. ஓவர் டயம் கூட ஒரு மடங்காக மட்டுமே கொடுக்கப்படுகிறது, சட்டப்படி தரவேண்டிய இருமடங்காக அது தரப்படுவதில்லை.
நிரந்தரப்பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் இரவு மற்றும் காலை வேலைக்கான படிகள் ஏதும் இந்தத் தாற்காலிகத் தொழிலாளிகளுக்கு தரப்படுவதில்லை. தன்னுடைய ஷிப்டுக்கும் மேலே தொடர்ந்து வேலை பார்க்கும் போது, விதிகளின்படி தொழிலாளிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய 11 மணி இடைவெளிகூட அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) யில் சேர்க்கப்படவில்லை. அவர்களுடைய வேலைகளை சரிவர செய்வதற்குத் தேவையான ஆடைகள், பாதுகாப்பு காலணிகள், மற்ற உபகரணங்களும் அளிக்கப்படுவதில்லை. தாற்காலிகத் தொழிலாளிகளே அவற்றை தம் சொந்த செலவில் வாங்குமாறு நிர்பந்திக்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறைகளோ, மருத்துவ வசதிகளோ, மருத்துவ காப்பீடோ தரப்படுவதில்லை. பணியில் ஈடுபட்டிருக்கும்போது விபத்தில் சிக்கி இறந்தவர்களுக்கும் முடமானவர்களுக்கும் எவ்வித இழப்பீடும் கொடுக்கப்படுவதில்லை.
இவர்களைத் தாற்காலிகத் தொழிலாளிகளாக வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடைய வேலையை வெட்டிக்குறைத்து அவற்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்துவதன் மூலமும், நிர்வாகிகள் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சுருட்டி ஊழல் நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் நிறுவனத்தின் சேவைகளின் தரம் சீரழிழ்ந்து பயணிகளின் கட்டணங்களும் அதிகரிக்கின்றன. அமைச்சர்களும் இயக்குனர்களும் ஏர் இந்தியாவை ஒழிப்பதற்கும் அதைத் தனியார்மயப்படுத்துவதற்கும் இந்தத் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
மொத்தத்தில் ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சின் தாற்காலிகத் தொழிலாளிகள் இந்த நூற்றாண்டின் மனிதர்களாகவே நடத்தப்படுவதில்லை. கற்காலத்தில் நிலவிய அடிமை முறைக்கும் இவர்களுடைய இன்றைய வேலை நிலைமைகளுக்கும் வேறுபாடு காண்பது கடினம். இவர்கள் ஆற்றிவரும் வேலைகள் ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சின் சேவைகளுக்கு மிகவும் அவசியமானவையும், நிரந்தரமானவையும் ஆகும். இருந்துங்கூட நிர்வாகம் இவர்களுடைய உழைப்பை காட்டுமிராண்டித்தனமாகச் சுரண்டி, கொள்ளையடித்து, தொழிற் சட்டங்களுக்கு எதிராக, அவர்களைத் தாற்காலிகத் தொழிலாளிகளாகவே நடத்தி வருகிறார்கள்.
ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சின் முன்னாள் நிர்வாக இயக்குனர் அர்விந் ஜாதவும், விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்து ஏர் இந்தியா நிறுவனத்தையே 60,000 கோடி ரூபாய் நட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். லுப்தான்சா, ஏர் அரேபியா போன்ற பல் வேறு வெளிநாட்டு நிறுவனங்களும், ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் போன்ற உள்நாட்டு பெரிய தனியார் விமான நிறுவனங்களும் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக, ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சு நிர்வாகம் தன்னுடைய மிகவும் இலாபகரமான 32 விமான ரூட்டுகளை அவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. மேலும் தன்னுடைய விமான சேவைகளின் நேரங்களை மாற்றி தனியார் விமான நிறுவனங்கள் இலாபமடைய நிர்வாகம் வழிவகுத்திருக்கிறது. ஏர் இந்தியாவிற்கு 24 விமானங்களே தேவைப்பட்ட போது, 68 போயிங்-777 மற்றும் 787 விமானங்களை வாங்க முன்வந்த தன் மூலம் பிரபுல் படேலும், அர்விந் ஜாதவும் போயிங் நிறுவனத்தை மூழ்குவதிலிருந்து காத்து, ஏர் இந்தியாவை நட்டத்தில் மூழ்கடித்திருக்கின்றனர். 65,000 கோடி ரூபாய் பொருமானமுள்ள கலினாவில் உள்ள 127 ஏக்கர் நிலத்தை எம்ஐஏஎல் நிறுவனத்திற்கும், 35,000 கோடி ரூபாய் பொருமானமுள்ள தில்லி நிலங்களை டிஐஏஎல் நிறுவனத்திற்கும் இலவசமாக வழங்கி இவர்கள், ஏர் இந்தியாவை திவாலாக்கியள்ளனர். இவ்வாறு இந்திய மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்டு, நடத்தப்பட்டுவரும் ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சு நிறுவனத்தை பெரிய முதலாளிகளும், அமைச்சர்களும் நிர்வாக இயக்குனர்களும் சூறையாடி, கொள்ளையடித்து வருகிறார்கள். அதே நேரத்தில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு நடத்தப்படும் இந்த நிறுவனம், இதில் உழைக்கும் அனைத்துத் துறைத் தொழிலாளிகளையும், கடுமையாகச் சுரண்டியும், வஞ்சித்தும், அவர்களுடைய நியாயமான அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்தும் வருகிறது. ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சின் தாற்காலிகத் தொழிலாளிகளை நிரந்தரமாக்க மறுப்பதும், பிற உரிமைகளை வழங்கமால் இருப்பதும் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதத் தாக்குதல்களின் ஒரு அங்கமாகும்.
நிர்வாகத்தின் இந்த தொழிலாளி விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இந்தத் தாற்காலிகத் தொழிலாளிகள் பல்லாண்டுகளாகப் போராடி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக தங்களுடைய ஒற்றுமையையும் தங்களுடைய சங்கத்தையும் கட்டி, கோரிக்கைகள் நிறைவேறும் வரை விட்டுக் கொடுக்காமல் போராடுவதென தோழர். திருஞான சம்பந்தத்தின் தலைமையில் செப்டெம்பர் முதல் வாரத்தில் கூடிய தொழிலாளிகள் முடிவெடுத்துள்ளனர். ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லயன்சின் தாற்காலிகத் தொழிலாளிகளுடைய முற்றிலும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற மக்களாட்சி இயக்கம் தன் வாழ்த்துக்களையும், முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.